மூணாறில் பயங்கர நிலச்சரிவு; ஆட்டோ, கோவில் மண்ணுக்குள் புதைந்தன


மூணாறில் பயங்கர நிலச்சரிவு; ஆட்டோ, கோவில் மண்ணுக்குள் புதைந்தன
x

70 பேரை காவு வாங்கிய அதே நாளில், மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆட்டோ மற்றும் கோவில் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் 175 குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மூணாறு,

நிலச்சரிவு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவு, சாலை சேதம், மரங்கள் முறிதல் ஆகிய சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மூணாறு பகுதியில் கன மழை பெய்தது. அப்போது மூணாறு அருகே குண்டலை புதுக்கடி என்ற இடத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 175 குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்டதில் மலை உச்சியில் இருந்த மண், கற்கள் உருண்டு வந்து விழுந்தன.

கோவில், கடைகள் புதைந்தன

இதில் அங்கு இருந்த கோவில், 2 கடைகள், ஆட்டோ மீது கற்கள் விழுந்ததில் அவை மண்ணுக்குள் புதைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மூணாறு போலீசார், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அந்த பகுதி மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மூணாறில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் தென்மலை அருகே மண் சரிவு ஏற்பட்டது, இதனால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதேபோல் மூணாறில் இருந்து சைலண்ட் வாலி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பீர்மேடு கிராம்பு பகுதியில் ஷைலா என்பவர் தனது மகன் அஜித்துடன் (வயது 12) வனப்பகுதியில் புளியம்பழம் பறிக்க சென்றார். அப்போது அந்த பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அங்கு ஓடும் கிராம்பி ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கால் தவறி ஆற்றில் விழுந்த அஜித் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சியார் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் மீது மரம் முறிந்து விழுந்து படுகாயமடைந்தார். வண்டன் மேடு பகுதியில் ஓடும் பஸ் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

கட்டப்பனை அடுத்துள்ள உப்புக்குன்னு என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் விவசாய நிலங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அந்தப் பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இடுக்கி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக மண் சரிவு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதே நாளில் நிலச்சரிவு

மூணாறு அடுத்துள்ள பெட்டி முடி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தோட்ட தொழிலாளர்கள் 70 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்நிலையில் மீண்டும் அதே நாளில் (ஆகஸ்டு 6-ந்தேதி) குண்டலை புதுக்கடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 175 குடும்பத்தினர் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story