தொடர் கனமழையால் நந்தி மலையில் 2 இடங்களில் மண்சரிவு


தொடர் கனமழையால் நந்தி மலையில் 2 இடங்களில் மண்சரிவு
x

தொடர் கனமழையால் நந்தி மலையில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே அமைந்துள்ளது நந்தி பெட்டா மலைப்பகுதி. இந்த பகுதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்த மலை மீது இருந்து மேகங்கள் திரண்டிருக்கும் காட்சியைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் நந்தி பெட்டா மலையில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. சுல்தான்பேட்டை கிராமத்தில் இருந்து நந்தி மலைக்கு செல்லும் பாதையில் வீரபத்ரசாமி கோவில் அருகிலும், அதேபோல் சுல்தான்பேட்டை கிராமத்தையொட்டி மற்றொரு இடத்திலும் என 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுல்தான்பேட்டை கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

தாங்கள் வசிக்கும் பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டு விடுமோ, பாறைகள் ஏதேனும் உருண்டு வீடுகள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறுகையில், 'நந்தி மலைக்கு செல்லும் வழியில் சுல்தான்பேட்டை கிராமம் அருகே 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருப்பது உண்மைதான். இருப்பினும் மலைக்கு செல்ல வாகன போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் ஒருமுறை மலைப்பாதையை நேரில் ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து மழை பெய்தால் மலைக்கு செல்ல வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது' என்றார்.


Next Story