கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது; போலீஸ் மந்திரி அரகஞானேந்திரா பேட்டி


கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது; போலீஸ் மந்திரி அரகஞானேந்திரா பேட்டி
x

கர்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்று போலீஸ் மந்திரி அரகஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

ஹிஜாப் விவகாரம்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து மசூதிகளில் இந்து கோவில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மசூதிகளுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்துவதால் மாநிலத்தில் மீண்டும் மதபிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மாநில போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தாவணகெரேவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யந்த் மற்றும் உயர் போலீசார் அதிகாரிகளுடன் பாதுகாப்பு குறித்து மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுதவிர வேறு எந்த போராட்டமும், மத பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக சந்தேகப்படும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூருவில் கல்வித்துறை மந்திரி நாகேஸ் வீட்டின் முன்பு ஒரு சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் கைதானவர்கள் தாவணகெரே, ஹாசனை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கும் இந்த போராட்டத்திற்கு தொடர்பு உள்ளது. காங்கிரஸ்தான் மக்களையும், மாணவர்களையும் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த செயலை காங்கிரஸ் கைவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story