நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; மதுபோதையில் காவலாளியை தாக்கிய பெண் வழக்கறிஞருக்கு ஜாமின்
நுழைவாயில் கதவை திறக்க தாமதமானதால் மதுபோதையில் இருந்த பெண் வழக்கறிஞர் காவலாளியை தாக்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு கடந்த 21-ம் தேதி பாவ்யா ராய் (வயது 32) என்ற பெண் வழக்கறிஞர் மதுபோதையில் தனது காரில் வந்தார்.
அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பாவ்யா ராய் மதுபோதையில் தனது காரை விட்டு இறங்கி அங்கு பணியில் இருந்த காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவலாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவர்களை தாக்கியுள்ளார். பின்னர், 'பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்' என கூறிய அப்பெண் பீகாரி சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தகாத சைகைகளை காட்டி அந்த காவலாளியை மிரட்டியுள்ளார்.
காவலாளியை பெண் வழக்கறிஞர் பாவ்யா ராய் தாக்குவதும், அவதூறாக பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரை தொடர்ந்து காவலாளிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்து, தாக்கிய பெண் வழக்கறிஞர் பாவ்யா ராய் போலீசார் 21-ம் தேதியே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழக்கக்கோரி பெண் வழக்கறிஞர் பாவ்யா ராய் நொய்டா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு பாவ்யா ராய்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் உள்ள வழக்கறிஞர் பாவ்யா ராய் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.