அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர்


அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர்
x

பெங்களூருவில் அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

பெங்களூரு:-

சுதந்திர தின விழா

கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் தாவர்சந்த் கெலாட் ராஜ்பவனில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடியை கையில் ஏந்தி தேசபக்தியை வெளிப்படுத்தினார். ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா தேசிய கொடி ஏற்றினார். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு தேசிய கொடி

ஏற்றினார். இதில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேஷாத்திரிபுரத்தில் உள்ள ஜனதா தளம் (எஸ்) அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

குமாரசாமி-ஜெகதீஷ் ஷெட்டர்

இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதில் கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றினார். அவர் பேசும்போது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று கூறினார்.

பெங்களூரு மாநகராட்சி சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தேசிய கொடி ஏற்றினார்.


Next Story