பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பா.ஜனதாவின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நேர்மையான அதிகாரி
பிரதமர் மோடி மண்டியாவுக்கு வந்தபோது, அங்கு உரிகவுடா, நஞ்சேகவுடா நுழைவு வாயில் அமைத்தனர். இதற்கு அனுமதி வழங்கிய டி.ஜி.பி. பிரவீன் சூட் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர் நல்ல, நேர்மையான அதிகாரி என்று நான் நினைத்தேன். அவர் பா.ஜனதாவினரின் சொல்படி பணியாற்றுகிறார். அந்த நுழைவு வாயில் அமைக்க எப்படி அனுமதி வழங்கினார்?.
பா.ஜனதாவினர் எப்போதும் வரலாற்றை திரிக்கும் பணியை செய்கிறார்கள். பசவண்ணர், குவெம்பு, நாராயணகுரு, பாலகங்காதரநாத சுவாமி, சிவக்குமார சுவாமி என யாரையும் விட்டு வைக்காமல் வரலாற்றை திரிக்கிறார்கள். உரிகவுடா, நஞ்சேகவுடா பெயா்கள் வரலாற்றில் இல்லை. ஆனால் இந்த 2 பெயர்களை உருவாக்கி அதை வைத்து பா.ஜனதாவினர் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
கைது செய்ய வேண்டும்
இதன் மூலம் ஒக்கலிகர்களை அவமதிக்கிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கும்போது, சாதிகள் இடையே விஷ விதைகளை விதைத்து மக்களை திசை திருப்ப பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். உரிகவுடா, நஞ்சேகவுடா என்ற பெயரில் மனிதர்கள் இருந்தனர் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?. தேர்தல் ஆணையம் டி.ஜி.பி.யை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்.
அவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அங்கு ஏன் அவரை விட்டு வைத்துள்ளனர். காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் வழக்கு போடுகிறார்கள். ஆனால் சட்டவிரோதமாக நுழைவு வாயில் வைத்தவர்கள் மீது எந்த வழக்கும் போடவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தற்போது பா.ஜனதாவின் கைப்பாவையாக பணியாற்றும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.