மேகதாது திட்டத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கை


மேகதாது திட்டத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

மேகதாது திட்டத்தை அமல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து வருவதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

விவசாயிகளின் பயிர்கள்

காவிரி படுகையில் நமக்கு 106 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேவை. தற்போது நம்மிடம் 56 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. 2 நாட்கள் மழை பெய்ததால் கடந்த 1-ந் தேதி வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியும், 2-ந் தேதி வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், 3-ந் தேதி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியும், 4-ந் தேதி வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், இன்று (நேற்று) வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் அணைகளுக்கு வந்தது. கடந்த 5 நாட்களில் நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் நீர் இருப்பு சற்று அதிகரித்துள்ளது.

நமது விவசாயிகளின் பயிர்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். இது எங்களுக்கு திருப்தி அளிக்கும் விஷயம். அடுத்த மாதம் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு நீர் இடர்பாடு ஆண்டு. மழை பெய்ய வேண்டி நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். நீர் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஆனால் நங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.

சட்ட நடவடிக்கை

தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க எங்களிடம் போதுமான நீர் இல்லை என்று கூறி காவிரி மேலாண்மை ஆணையத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளோம். மேகதாது திட்டத்தை அமல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.

இந்த விஷயங்கள் படிப்படியாக பணிகளை செய்கிறோம். கர்நாடக அரசு அனைவரின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் செயல்படுகிறது. இரண்டு எதிரிகளும் (பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)) ஒன்று சேர்ந்து எங்கள் அரசை கவிழ்க்க தேதியை நிர்ணயித்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்


Next Story