பா.ஜனதா போராட்டம் நடத்தட்டும்; நாங்கள் மக்கள் சேவை ஆற்றுகிறோம் -டி.கே.சிவக்குமார் பேட்டி
பா.ஜனதா போராட்டம் நடத்தட்டும், நாங்கள் மக்கள் சேவை ஆற்றுகிறோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்கள் சேவை ஆற்றுகிறோம்
நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம். 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அக்கட்சி தலைவர்களால் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியவில்லை.
அதனால் எங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் 365 நாட்களும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கட்டும்.நாங்கள் மக்கள் சேவையை ஆற்றுகிறோம். 10 கிலோ அரிசி உள்பட 5 உத்தரவாத திட்டங்களையும் நாங்கள் அமல்படுத்தியே தீருவோம். அரிசியை திடீரென சாகுபடி செய்ய முடியாது. மத்திய அரசு ஏற்கனவே தனது கிடங்குகளில்போதுமான அளவுக்கு அரிசியை கையிருப்பு வைத்துள்ளது. அந்த அரிசியை வழங்காமல் அன்ன பாக்யதிட்டத்திற்கு குறுக்கீடு செய்கிறது.
அரிசி கொள்முதல்
மத்திய அரசின் நிறுவனங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்ய விலை பட்டியலை கேட்டுள்ளோம். ஒருவேளை அவர்கள் அரிசி வழங்க மறுத்தால், வேறு எங்கிருந்தாவது அரிசி கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு வழங்குவோம்.
சில இடங்களில் ராகி, சோளம் உள்ளிட்ட தானியங்களை வழங்குமாறு மக்கள் கேட்கிறார்கள். மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் மாநில அரசே தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கிரகலட்சுமி திட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படும். இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.