மதுபான கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி மந்திரியிடம் திகார் சிறையில் சி.பி.ஐ. விசாரணை


மதுபான கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி மந்திரியிடம் திகார் சிறையில் சி.பி.ஐ. விசாரணை
x

டெல்லி திகார் சிறையில் டெல்லி மந்திரியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

புதுடெல்லி,

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் டெல்லி மந்திரியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

டெல்லியில் நடந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசில், மந்திரியாக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார்.

வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுகாதார இலாகா பறிக்கப்பட்டது. இலாகா இல்லாத மந்திரியாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.

டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. மற்றொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி நாக்பாலிடம் சி.பி.ஐ. கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது. அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இத்தகவலை சத்யேந்தர் ஜெயினின் வக்கீல் தெரிவித்தார்.


Next Story