ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் பிரபல தனியார் வங்கி முன்னாள் நிர்வாகி கணவருடன் கைது


ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் பிரபல தனியார் வங்கி முன்னாள் நிர்வாகி கணவருடன் கைது
x

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. முன்னாள் நிர்வாகி சந்தா கோச்சார், கணவருடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடன் மோசடி வழக்கு

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக கூறப்பட்டது.

இதன் மூலம் அவரது கணவரும், தொழில் அதிபருமான தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து சந்தா கோச்சார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதிரடி கைது

இந்த வங்கி கடன் முறைகேடு வழக்கில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சந்தா கோச்சார், அவரது கணவரிடம் டெல்லியில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போது அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அன்று இரவு 2 பேரையும் சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது. 2 பேரும் நேற்று காலை விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு அங்குள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோர்ட்டு 2 பேரையும் நாளை (திங்கட்கிழமை) வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியது.


Next Story