எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரங்களை 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; லோக் அயுக்தா எச்சரிக்கை


எம்.எல்.ஏ.க்கள் சொத்து விவரங்களை 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; லோக் அயுக்தா எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2023 9:37 PM GMT (Updated: 10 Jun 2023 8:56 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 30-ந்தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என லோக் அயுக்தா கெடு விதித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 30-ந்தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என லோக் அயுக்தா கெடு விதித்துள்ளது.

சொத்து விவரங்களை தாக்கல்...

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த மாதம் 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 224 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களும் தங்களது சொத்து விவரங்களை கண்டிப்பாக லோக் அயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க் களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 224 பேருக்கும் ஏற்கனவே லோக் அயுக்தா சார்பில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் இதுவரை 224 பேரில் ஒருவர் கூட சொத்து விவரங்களை லோக் அயுக்தாவில் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 30-ந் தேதிக்குள் லோக் அயுக்தாவில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ். பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

இதுதொடர்பாக கர்நாடக தலைமை செயலாளருக்கு, நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி பி.எஸ்.பட்டீல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுக்கு சொத்து விவரங்களை அளிக்கும்படி அறிவுறுத்தி இருந்தும், இதுவரை ஒருவரும் தாக்கல் செய்யாமல் இருப்பதால், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டுள்ள லோக் அயுக்தா நீதிபதி, சொத்து விவரங்களை வருகிற 30-ந் தேதிக்குள் தாக்கல் செய்யாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story