'சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார்' - பிரதமர் மோடி


சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார் - பிரதமர் மோடி
x

Image Courtesy : @BJP4India

இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற சுதர்சன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

குஜராத்தில் 4 வழி கொண்ட கேபிள் பாலம் ஒன்றை பிரதமர் மோடி இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து உள்ளார். இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற இந்த பாலத்திற்கு சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடலுக்கு அடியில் நீரில் மூழ்கிய துவாரகா நகரை பிரதமர் மோடி பார்வையிட்டு பிரார்த்தனை செய்தார். மேலும் துவாரகாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"சுதர்சன் பாலத்தை நான் கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார். அவரால் இது சாத்தியமானது. குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது, நான் சுதர்சன் சேது திட்டத்தை மத்திய காங்கிரஸ் அரசிடம் முன்வைத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இன்று துவாரகாவிற்கு நான் ஒரு மயில் தோகையை எடுத்துச் சென்று சமர்ப்பித்தேன். என் கனவு நனவாகியதால், என் இதயம் உணர்ச்சிகளால் நிரம்பி வழிகிறது.

புதிய இந்தியாவுக்கான உத்தரவாதத்தை நான் மக்களுக்கு வழங்கியபோது, எதிர்க்கட்சிகள் என்னை கேலி செய்தனர். ஆனால் இன்று ஒவ்வொரு இந்தியனும் தங்கள் கண் முன்னே ஒரு புதிய இந்தியா கட்டப்படுவதை பார்க்க முடிகிறது. காங்கிரஸ் கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருந்த போதும், மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.

ஏனெனில் அவர்களின் முயற்சி அனைத்தும் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே இருந்தது. ஊழல்களை மறைத்து ஐந்தாண்டுகள் எப்படி அரசாங்கத்தை நடத்துவது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.

2014-ல் நீங்கள் என்னை ஆசிர்வதித்து டெல்லிக்கு அனுப்பியபோது கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவேன் என்று உறுதியளித்தேன். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தற்போது இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதன் விளைவுதான் இப்போது இந்தியாவில் நீங்கள் பார்க்கக்கூடிய கட்டுமான அற்புதங்கள்.

காஷ்மீரில் உள்ள செனூப் பாலம், மும்பையில் உள்ள அடல் சேது, தமிழ்நாட்டில் உள்ள செங்குத்து தூக்கு ரெயில்வே கடல் பாலம் ஆகியவற்றைப் போலவே சுதர்சன் பாலமும் பொறியியல் அதிசயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story