ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் - பரூக் அப்துல்லா


ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் - பரூக் அப்துல்லா
x
தினத்தந்தி 21 Nov 2022 9:53 AM IST (Updated: 21 Nov 2022 9:54 AM IST)
t-max-icont-min-icon

ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் என்று முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறினார்.

காஷ்மீர்,

காஷ்மீரில், செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாட்டு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல்-மந்திரியாக இருந்துள்ளார். அவர் 1983-ம் ஆண்டில் இருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது, ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் தேசிய மாநாடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:-

இந்திய பிரிவினை காலத்தில் முகமது அலி ஜின்னா எனது தந்தை ஷேக் முகமது அப்துல்லாவின் ஆதரவை கோரினார். அப்போது எனது தந்தை இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார். நல்ல வேளையாக காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவில்லை.

இந்தியாவில் 80 சதவீதம் பேர் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீரில் 50,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, அவை எங்கே?. எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் வேலையில்லாமல் உள்ளனர்.

எந்த மதமும் தீங்கானது கிடையாது. அந்தந்த மதங்களில் இருக்கும் தீய மனிதர்கள் தான் தீமையை விளைவிக்கின்றனர். கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் வலிமை. ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story