சிவலிங்கத்தை பெயர்த்து கோவிலுக்கு வெளியே வீசினர்.. மத்திய பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்


சிவலிங்கத்தை பெயர்த்து கோவிலுக்கு வெளியே வீசினர்.. மத்திய பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 1 Feb 2024 1:18 PM IST (Updated: 1 Feb 2024 1:49 PM IST)
t-max-icont-min-icon

கோவிலை இழிவுபடுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குணா:

மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது பமோரி நகரம். இந்த நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், கோவிலை சேதப்படுத்தி உள்ளனர். கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து வெளியே வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 5 அல்லது 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கோவில் இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் உருவானது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவிலை இழிவுபடுத்தி சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Next Story