ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியம்


ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியம்
x

மண்டியா அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டியா:

மண்டியா அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் விற்பனை நிலையம்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா பேபி கிராமத்தில் பாஸ்திரங்கப்பா என்பவர் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு 10.30 மணி அளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சாப்பிட அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

இதனால் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. அந்த சமயத்தில் மர்மநபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் யாரும் இல்லை என்பது அறிந்து, பெட்ரோல்- டீசல் நிரப்பப்பட்டு இருந்த டேங்கரில் இருந்த பம்பை திறந்துவிட்டு தரையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

சாலையில் ஆறாக ஓடிய பெட்ரோல்-டீசல்

இதனால் பெட்ரோல், டீசல் சாலையில் ஆறாக ஓடத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ஊழியர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பெட்ரோல், டீசல் பம்புகள் தரையில் கிடைப்பதையும், பெட்ரோல், டீசல் வெளியேறி வீண் ஆனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் விரைந்து வந்து பெட்ரோல், டீசல் பம்புகளை மூடினர். இதுகுறித்து அவர்கள் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரான பாஸ்திரங்கப்பாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பாண்டவபுரா போலீசில் புகார் அளித்தார்.

ரூ.10 லட்சம் மதிப்பு

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஊழியர்கள் சாப்பிட சென்ற நேரத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்து பெட்ரோல், டீசல் பம்புகளை திறந்துவிட்டு அட்டூழியம் செய்ததும், இதில் 8 ஆயிரம் லிட்டருக்கு மேல் பெட்ரோலும், 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் டீசலும் தரையில் கொட்டி நாசமானதும், இதன் மொத்த சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டு 2 மாதமே ஆனதும், இந்த நிலையில் இந்த துணிகர சம்பவம் நடந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே தொழில் போட்டியில் யாராவது இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story