5 வயதில் வலது கையை இழந்தவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் ரேங்க் பெற்று சாதனை


5 வயதில் வலது கையை இழந்தவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் ரேங்க் பெற்று சாதனை
x

சிவில் சர்வீசஸ் தேர்வில், 5 வயதில் விபத்தில் வலது கையை இழந்த இளம்பெண் ரேங்க் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வசித்து வரும் தம்பதி கே. புகாரி மற்றும் சஜீனா பீவி. புகாரி, காட்டன் ஹில் அரசு உயர்நிலை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் 2-வது மகள் அகிலா (வயது 28).

சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் அகிலா, 760-வது ரேங்க் பெற்று உள்ளார். அவருக்கு 5 வயது இருக்கும்போது, பேருந்து விபத்தில் வலது கையை இழந்து உள்ளார். இதனால், வாழ்க்கையில் பல சோகங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

எனினும், நாட்டின் அதிக கவுரவமிக்க தேர்வில் அவர் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.

கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நடந்த விபத்தில் அகிலாவின் தோள் பகுதியில் இருந்து வலது கை முழுவதும் போய் விட்டது. ஜெர்மனியில் உள்ள டாக்டர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளும்படி அவர்களிடம் கூறப்பட்டு உள்ளது.

ஆனால், ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்த மருத்துவ குழுவினர் அவரை ஆய்வு செய்த பின்னரும், வலது கை இணைக்கப்படவில்லை. தோள்பட்டையின் முனை பகுதியை அவர் இழந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதன்பின் தனது தினசரி வேலைகளை இடது கையை கொண்டு செய்து பழகியுள்ளார். இடது கையால், எழுத கற்று கொண்டார். வாரிய தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

அதன்பின் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ. படிப்பு முடித்த பின்பு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி உள்ளார். இது அவருக்கு 3-வது முயற்சியாகும். முதல் 2 முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி பற்றி அகிலா கூறும்போது, ஐ.ஏ.எஸ். பணி பற்றி எனது ஆசிரியரே எனக்கு விரிவாக எடுத்து கூறினார். அந்த கனவு அவரிடம் இருந்தே வந்தது. கலெக்டராகும் எண்ணம் அதன்பின்பே எனக்கு வந்தது. பட்டப்படிப்பு முடித்த பின்னர் அதற்கு தயாராக தொடங்கினேன் என கூறியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள மையத்தில் ஒரு வருடம் பயிற்சி பெற்று, கேரளா திரும்பினேன். அதன்பின் திருவனந்தபுரத்திலும் மையம் ஒன்றில் சேர்ந்து படித்தேன். தேர்வுக்கு தயாராக மிக பெரிய கடின உழைப்பை கொடுக்க வேண்டும். பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நீண்டகாலம் எடுக்கும். தேர்வுக்கு தொடர்ச்சியாக 3 முதல் 4 மணிநேரம் வரை படிப்பேன் என கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ். எனது இலக்கு. எனது விருப்பத்தின்படி நான் தேர்வு செய்த இந்த படிப்பில், தேர்ச்சி பெறும் வரை தயாரிப்பது என முடிவு செய்தேன்.

தொடர்ந்து முயற்சி செய்ய முடிவெடுத்தேன். முடிந்த வரை முயற்சிக்க வேண்டும் என முடிவு செய்தேன் என்று தேர்வில் வெற்றி பெற்றது பற்றி பெருமையுடன் கூறுகிறார்.

1 More update

Next Story