ஒலி பெருக்கி...பா.ஜனதா தலைவர்கள் என்னை குறிவைத்து தாக்குவது ஏன்?
நான் ஏழை. என்னை மரியாதையாக நடத்தாததால் தான் பா.ஜனதாவில் இருந்து வெளியேறினேன். நான் மட்டுமல்ல பல தலைவர்கள் விலகிவிட்டனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி, சிறிய தொகுதி. இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு எதிராக அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி உள்பட பல தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்ய வருகிறார்கள். என்னை ஏன் அவர்கள் குறிவைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் என்னை மட்டும் தாக்குவது ஏன்?.
- ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் வேட்பாளர்.
கர்நாடக மக்களை அமித்ஷா அவமதித்துவிட்டார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், கலவரம் ஏற்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கர்நாடக மக்களை அவமதித்துவிட்டார். மத்திய உள்துறை மந்திரியே இவ்வாறு கூறவது அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக மக்கள் கிளர்ச்சியாளர்கள் என்றும், பிரதமர் மோடி மட்டும் தான் அவர்களை கட்டுப்படுத்துகிறார் என்பது போல் அமித்ஷா கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம். மேலும் சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்.
- மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்.
ஊழல், முறைகேடு என்றாலே காங்கிரஸ் கட்சி தான்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய அங்கமே ஊழல் தான். ஊழல் என்றால் காங்கிரஸ். காங்கிரஸ் என்றால் ஊழல் தான். காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. கடந்த 1½ ஆண்டுகளாக சித்தராமையா உள்பட காங்கிரசார் பா.ஜனதா பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஊழல்வாதிகள்.
- பசவராஜ்பொம்மை, முதல்-மந்திரி.
என்னை போல் சித்தராமையா அரசியலில் இருந்து ஓய்வு பெறட்டும்
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு பலம் இருந்தால், என்னை போல் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறட்டும். அவர் கட்சி அமைப்பில் சேரட்டும். அவருக்கு அதிகாரம், பதவி தாகம் இருப்பதால் தான் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார். துணை முதல்-மந்திரி பதவி ெகாடுக்காததால் வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். -கே.எஸ்.ஈசுவரப்பா, பா.ஜனதா மூத்த தலைவர்.
கட்சி தாவியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்
பா.ஜனதாவில் பதவி, அதிகாரங்களை அனுபவித்துவிட்டு கட்சி தாவியர்கள் வெற்றி பெற மாட்டார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது உள்பட பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டாம் என்று கட்சியின் தேர்தல் குழு தான் முடிவு செய்தது. ஆனால் பி.எல்.சந்தோஷ் மீது ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
-நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மாநில தலைவர்.