சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
உணவு மற்றும் பொது வினியோகத்துறை, கடந்த 6-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், சமையல் எண்ணெய் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், விலை குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு செய்பவர்களால் வினியோகஸ்தர்களுக்கு விலை குறைப்பு ஏற்படும்போதெல்லாம், அதன் பயனை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை சில நிறுவனங்கள் ஏற்று அமல்படுத்தவில்லை. அந்த நிறுவனங்கள் உடனே சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.15 அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொதுவினியோகத்துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் சர்வதேச விலை கீழ்நோக்கிச் செல்வது மிகவும் சாதகமான நிலை என்றும், எனவே, உள்நாட்டுச்சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பை உள்நாட்டு சமையல் எண்ணெய் தொழில்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த விலை வீழ்ச்சியின் பலன், பொதுமக்களுக்கு தாமதம் இன்றி விரைவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய கூட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் (பார்ச்சூன்) ஒரு லிட்டர் 'பேக்'கின் விலை ரூ.220-ல் இருந்து ரூ.210 ஆக குறைக்கப்பட்டது. சோயாபீன் (பார்ச்சூன்) மற்றும் கச்சி கானி எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.205-ல் இருந்து ரூ.195 ஆக குறைக்கப்பட்டது. சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டது. குறைக்கப்பட்ட வரியின் முழுமையான பலன் நுகர்வோருக்கு மாறாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு எண்ணெய் தொழில்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
சில எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைக்கவில்லை. மற்ற பிராண்டுகளை விட அதிகபட்ச சில்லரை விலை அதிகமாக இருக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் விலைகளைக் குறைக்க வேண்டும். இதை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும்.
நாட்டில் நிலவும் சமையல் எண்ணெய் விலை நிலவரம், எண்ணெய் இருப்பு ஆகியவற்றை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமையல் எண்ணெய் மீதான வரிகளை குறைத்துள்ள நிலையில், அதன் பலன் தவறாமல் பொதுமக்களை உடனே சென்றடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.