சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவு!
சத்தீஷ்காரில் 2ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
புதுடெல்லி,
சத்தீஷ்காரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் கடந்த 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த பிந்த்ராவாகர் விதான் சபா தொகுதியில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டோடு அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
சத்தீஷ்காரில் பகல் 1 மணி நிலவரப்படி 38.22 சதவீத வாக்குகளும், 3 மணிக்கு 55.31 சதவீத வாக்குகளும், மாலை 6 மணிக்கு 68.15 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இரண்டாம் கட்டத்தில் 68.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோன்று பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்திலும் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 230 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 71.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல்நாத்தை, சிந்த்வாராவின் பரரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.