சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளை முடிகிறது; அடுத்து நடக்கப்போவது என்ன?
சிவசேனாவின் தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளை முடிகிறது. அடுத்து நடக்கப்போவது என்ன என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் விசாரணை
சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது.
அதன்பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் தீப்பந்தம் சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தலைமையிலும், பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரில் வாள், கேடயம் சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. தற்போது யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.
வாதங்கள் நிறைவு
தங்கள் பக்கம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே தரப்பு கூறுகிறது. இதேபோல மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் அதிகம் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே தரப்பு வாதித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன.
ஜனவரி 30-ந் தேதி வரை எழுத்து பூர்வமான வாதங்களை வைக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.
உத்தவ் தாக்கரே பதவிக்காலம் முடிகிறது
இந்தநிலையில் சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளையுடன் (திங்கட்கிழமை) முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் தலைவராக 5 ஆண்டு காலத்துக்கு பொதுக்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எனவே கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
சட்ட அனுமதி தேவையில்லை
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள எங்களுக்கு சட்ட அனுமதி எதுவும் தேவையில்லை. உண்மையான சிவசேனா யார் என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தவுடன் சட்டரீதியாகவும் அவர் தலைவராவார்" என்றார்.
தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், " ஒட்டுமொத்த மராட்டியத்துக்கும் யார் சிவசேனா என்பது தெரியும். சிவசேனா கட்சி பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, அனைத்து தொண்டர்களுக்கும் சொந்தமானது. தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உண்மை வெல்லும். ஆனால் எவ்வளவு காலம் இந்த சட்டவிரோத அரசு தொடரும்?. ஒருவரின் பேராசையால் இதுவெல்லாம் நடந்து இருக்கிறது. இது ஒரு சட்டவிரோத அரசாங்கம் " என்றார்.