ஆணவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய விதிகள் - மராட்டிய அரசு


ஆணவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய விதிகள் - மராட்டிய அரசு
x

ஆணவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, கும்பல் வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க அரசு புதிய விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு

மதம் மற்றும் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவ கொலைகள், இவ்வாறு திருமணம் செய்த தம்பதிகளுக்கு எதிராக கட்டபஞ்சாயத்து மூலம் மோசமான தண்டனை வழங்கும் நடைமுறைகள் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதுமட்டும் இன்றி இதனால் வன்முறைகளும் வெடிக்கிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.

இதுகுறித்து புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழிப்புடன் இருக்கவேண்டும்...

மராட்டியம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் அந்தந்த அதிகார வரம்பில் உள்ள பகுதியில் சாதி அல்லது மத மறுப்பு திருமணங்கள் நடப்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கட்டபஞ்சாயத்து நடப்பது தெரிந்தால் அதிகாரிகள் அதன் உறுப்பினர்களை தொடர்புகொண்டு, சட்டப்படி இதுபோன்ற கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து உள்ளூர் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவைப்பட்டால் அத்தகைய கூட்டங்களை தடை செய்ய வேண்டும். தடையை மீறி கூட்டம் நடத்தப்பட்டால், துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டாயம் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட தம்பதிகள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

வீடியோ பதிவு

இதுபோன்ற கூட்டங்களை போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும் மற்றும் விதிகளை மீறி முடிவுகளை எடுப்பவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலும் கட்டப்பஞ்சாயத்து அல்லது அத்தகைய அமைப்புகளின் கூட்டத்தை சட்டப்படி தடை செய்ய முடியாவிட்டால் மற்றும் தம்பதிக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

துறை ரீதியான விசாரணை

இதேபோன்று சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உறவினர்கள், சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கட்ட பஞ்சாயத்து போன்ற அமைப்புகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள் குறித்து தம்பதியிடமிருந்து வரும் புகார்களை உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் தம்பதிகளை மிரட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இந்த விதிகளை வேண்டுமென்றே அல்லது அலட்சியம் காரணமாக கடைப்பிடிக்காத போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்வதோடு, அவர்கள் தண்டனைக்குரிய நடவடிக்கையை எதிர்கொள்ளநேரிடும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Next Story