மராட்டியம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் நாளை பங்கேற்பு: ஏக்நாத் ஷிண்டே
மராட்டியத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாளை பங்கேற்று, அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற உள்ளேன் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
கவுகாத்தி,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழ கூடிய வாய்ப்பு உள்ளது. கடந்த 20ந்தேதி இரவில் தொடங்கிய இந்த அரசியல் குழப்பம், ஒருவாரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. இதேபோன்று, உத்தவ் தாக்கரே உங்கள் மீது இன்னும் எனக்கு அக்கறை உள்ளது. உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள். உங்களின் குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என பேசினார்.
எனினும், கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார். ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா மற்றும் அதன் தொண்டர்களை விடுவிக்க நான் விரும்புகிறேன். இதனை சிவசேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நான் போராடி வருகிறேன். இந்த போரானது, கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். தொடர்ந்து ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியிலேயே முகாமிட்டு உள்ளனர்.
கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மறுபுறம், ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு சிவசேனா பாலாசாகேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் போர்னரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாட், லதாபாய் சோனவானே, பிரகாஷ் சுர்வே உள்ளிட்ட 15 பேருக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷிண்டே, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடனும் தொலைபேசியில் 2 முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜனதா நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது. பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம். கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
இந்நிலையில், அசாமின் கவுகாத்தியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே இன்று காலை மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேருடன் காமக்யா கோவிலுக்கு சென்று வழிபட்டார். இதன்பின்பு பாதுகாப்பு வீரர்கள் சூழ வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மராட்டியத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்யவே நான் இங்கிருக்கிறேன். மும்பையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி நடப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மராட்டிய அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.