காஷ்மீர்: 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலை பாடும் மாணவிகள்; இந்து மத பாடலை பாடவைப்பதா? - மெகபூபா முப்தி


காஷ்மீர்: ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடும் மாணவிகள்; இந்து மத பாடலை பாடவைப்பதா? - மெகபூபா முப்தி
x

காஷ்மீரில் பள்ளி மாணவ-மாணவிகள் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை பாடும் வீடியோவை மெகபூபா சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீநகர்,

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி நாட்டு மக்களை ஒன்றிணைக்க 'ரகுபதி ராகவ ராஜாராம்' என தொடங்கும் பாடலை பயன்படுத்தினார். இந்து மத கடவுள் விஷ்னு குறித்து கவிஞர் துளசிதாசால் 1530-1623 ஆண்டு வாக்கில் இந்த பாடல் முதலில் எழுதப்பட்டது.

பின்னர், இந்து - இஸ்லாமிய மதத்தினரை ஒன்றிணைக்கும் வகையில் இந்த பாடலில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அதை காந்தி சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தினார். மாற்றியமைக்கப்பட்ட இந்த பாடலில் இந்து மத கடவுள்கள் சிவன், ராமன், சீதா மற்றும் இஸ்லாமிய மத கடவுள் அல்லாவின் பெயர்கள் இடம்பெற்றன. மாற்றியமைக்கப்பட்ட இந்த பாடலை இந்து - இஸ்லாம் மதத்தினர் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த உதவ காந்தி பயன்படுத்தினார்.

இந்நிலையில், காஷ்மீரில் உள்ள ஒரு பள்ளியில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலை ஆசிரியர்கள் பாட மாணவ - மாணவிகளும் அந்த பாடலை உடன் சேர்ந்து பாடுகின்றனர்.

இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, மத அறிஞர்களை சிறையில் அடைத்துவிட்டு, ஜூம்மா மசூதியை மூடிவிட்டு, பள்ளிக்குழந்தைகளை இந்து மத பாடலை பாடவைப்பது காஷ்மீரில் இந்திய அரசின் உண்மையான இந்துத்துவ கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்த வெறித்தனமான கட்டளைகளை மறுப்பது பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இது தான் ஜம்மு-காஷ்மீரின் மாற்றம் என கூறப்படுவதற்கு நாம் கொடுக்கும் விலை' என்றார்.




Next Story