இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து இருப்பது ஏன்?; சட்டநிபுணர், பொதுமக்கள் கருத்து
இன்றைய இளைஞர்களிடம் விவாகரத்து முடிவு அதிகரித்து ஏன் என்பது குறித்து சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
பெங்களூரு:
இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர்.
சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர்.
சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக இருக்கின்றன என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபற்றிய விவரத்தைக் காண்போம்.
பணம், ஆடம்பர வாழ்க்கை
பெங்களூரு ராமமூர்த்திநகர் எரன்னபாளையாவை சேர்ந்த வக்கீல் செல்வி கூறுகையில், "பெங்களூருவை பொறுத்தவரை தற்போது விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து விட்டன. அதுவும் ஐ.டி. நிறுவனங்கள் தலை தூக்கிய பின்பு எதற்கெடுத்தாலும் விவாகரத்து தான் என்றே சொல்லலாம். இதுதவிர செல்போன் பயன்பாடு, டி.வி.களில் சீரியல் பார்த்து பெண்கள் கெட்டு போவதும் ஒரு காரணம். என்னிடம் கூட விசித்திரமான விவாகரத்து சம்பவங்கள் வந்துள்ளன. ஒரு பெண் தனது கணவர் வீட்டை சுத்தமாக வைக்கவில்லை, அவர் சுத்தமாக இருப்பதில்லை, அதனால் விவாகரத்து வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார். மற்றொரு பெண் தனது கணவர் கைநிறைய சம்பாதிப்பது இல்லை. அவருடன் வாழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லாததால், விவாகரத்து கேட்டு இருந்தார்.
எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் பணம். ஆடம்பர வாழ்க்கை வாழவே இப்போதுள்ள பெண்கள் விரும்புகிறார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து குடும்பத்தை நடத்துவதில்லை. செல்போனில் வரும் வீடியோக்களை பார்த்து, அவர்களை போன்று வாழ வேண்டும் என்ற ஆசையில் தங்களது வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். குறிப்பாக ஆண்களை விட தற்போது பெண்கள் தான் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற ஆர்வம் காட்டுகிறார்கள். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற விரும்பும் பெண்களுக்கு தேவையான செலவு, கோர்ட்டுகளில் நடக்கும் வழக்குகளுக்கு ஆகும் செலவுகளை, ஆண் நண்பர்களே செய்கின்றனர். கணவரை விட அதிக சம்பளம் வாங்குவது என பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். முந்தைய காலத்தில் இருந்தது போன்ற தற்போதைய குடும்ப வாழ்க்கை நகர்ப்புறங்களில் இல்லை. குடும்ப வாழ்க்கை முழுமையாக மாறி வருவதே விவகாரத்துக்கு காரணமாகிறது" என்றார்.
பேசி தீர்க்க வேண்டும்
பெங்களூரு யஷ்வந்தபுரத்தை சேர்ந்த ராஜேஸ் கூறுகையில், "எனக்கும், முதல் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து விட்டோம். தற்போது நான் 2-வது திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். தற்போது சாதாரண பிரச்சினையை கூட பெரிதாக்கி விவாகரத்து வரை சென்று விடுகிறது.
எந்த ஒரு பிரச்சினையும் பேசி தீர்க்க வேண்டியது அவசியம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. இருவரும் புரிந்து வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால், எந்த பிரச்சினையும் ஏற்படாது. விவாரகத்து வரை செல்ல வேண்டிய நிலை வராது" என்றார்.
சிவமொக்கா பாரதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் இயக்குனர் அருணகிரி கூறுகையில், "ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்ளாமல் திருமணம் செய்துகொள்பவர்கள் இடையே அடிக்கடி சிறு, சிறு பிரச்சினைகள் எழுகிறது. இதுவே அவர்கள் இடையே விரிசலை ஏற்படுத்தி விவகாரத்து வரை சென்று விடுகிறது. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமண முறிவு என்பது அரிதாக நடைபெறும். ஆனால் இன்றைய நவீன உலகில் ஆணும், பெண்ணும் அவசரம் அவசரமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்த சில மாதங்களிலேயே ஈகோ ஏற்பட்டு விவகாரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்கள். இன்றைய நவீன உலகத்தின் சாபக்கேடு இது. கர்நாடகத்தில் விவகாரத்து கோரும் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு சார்பில் மாநிலம் முழுவதும் சகாயவாணி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மங்களூரு குந்திக்கானா பகுதியை சேர்ந்த சிவா கூறுகையில், "காதலித்து திருமணம் செய்தவர்களோ அல்லது பெற்றோர் பார்த்து திருமணம் செய்தவர்களோ என்ற பாகுபாடு இல்லை. இன்றைய தலைமுறையினர் இடையே சகிப்புதன்மை, பொறுமை இல்லாததால் தான் திருமண முறிவு அதிகம் ஏற்படுகிறது. மேலும் தவறான பழக்கவழக்கங்களாலும், மூத்தோர்களின் அறிவுரைகள் கிடைக்காமல் சிறிய பிரச்சினைக்கே விவகாரத்து வரை தம்பதியினர் செல்கிறார்கள். இருவரும் மனம் விட்டு பேசினாலே பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் சகிப்புத்தன்மை இல்லாததாலும், ஈகோவாலும் பிரச்சினை பெரிதாகி திருமண பந்தம் பாதியில் முடிவடைந்து விடுகிறது. இதுபற்றி குழந்தைகளுக்கு பெற்றோர் இளம் வயதிலேயே புத்திமதி கூறி, திருமண பந்தம் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறி புரியவைக்க வேண்டும்" என்றார்.
விட்டு கொடுக்கும் மனநிலை இல்லை
மைசூரு டவுன் அசோகபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்கிற ராஜண்ணா கூறுகையில், "திருமணம் செய்த தம்பதி இடையே பிரச்சினை ஏற்பட்டால் குடும்பத்தினர் அறிவுரை வழங்கி இருவரையும் சேர்ந்து வாழ வைத்துவிடுவார்கள். அதன் பிறகும் தம்பதி இடையே சுமுக உறவு நீடிக்க வில்லை எனில் ஊர் பெரியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பார்கள். ஆனால் இ்ன்றைய காலக்கட்டத்தில் அந்த நிலை இல்லை. இன்றைய காலத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் மத்தியில் தான் அதிகளவில் திருமண முறிவு ஏற்படுகிறது. காதலிக்கும் போது இனிக்கும் பந்தம், திருமணத்திற்கு பிறகு கசந்துவிடுகிறது. காதல் திருமணம் செய்தவர்கள் பெற்றோரை பிரிந்து தனியாக வசிக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டால் அதை தீர்த்து வைக்க குடும்ப உறுப்பினர்கள் கூட இருப்பதில்லை. இதனால் அவர்கள் மத்தியில் ஏற்படும் சிறிய வாக்குவாதம் விவாகரத்து வரை சென்று விடுகிறது. விட்டு கொடுக்கும் மனம் இன்றைய இளம்பெண்கள், இளைஞர்கள் மத்தியில் இருப்பதில்லை. இதனால் திருமண முறிவு அதிகளவில் நடக்கிறது. முன்பு கூட்டுக்குடும்பம் முறை இருந்தது. அப்போது திருமணம் செய்த ஆண், பெண் இடையே தகராறு ஏற்பட்டால் மூத்தவர்கள் அறிவுரை கூறுவார்கள். ஆனால் இன்று கூட்டுக்குடும்பம் நடைமுறை சிதைந்து உறவுகள் என்பதே காணாமல் போய் வருகிறது. இதுவும் திருமண பந்தம் முறிவுக்கு ஒரு காரணம் தான்" என்றார்.
உளவியல் நிபுணர் ஜி.லோட்டஸ் ராணி கூறும் போது, 'விவாகரத்துக்கு நிதி நிலைமை, சுதந்திரமாக இருக்க முடியாத நிலை முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களை பார்ப்பதன் மூலம் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் பிறருடைய வாழ்க்கையை நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுவது, வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களும் கூறப்படுகிறது. இதனால் எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் நாங்கள் கூறுவது பிறருடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பேச கூடாது. அத்துடன், தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, கிடைத்த வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு சண்டை சச்சரவுகள் இன்றி விட்டு கொடுத்து சந்தோஷமாக வாழ பழக வேண்டும் என்று அறவுறுத்துகிறோம்' என்றார்.