மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக போர்க்கொடி: மம்தா பானர்ஜியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜியை சந்தித்தார். அவரது போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக மம்தா உறுதி அளித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் அதிகாரிகள் மாற்றம், நியமனம் போன்றவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு, டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
அதே சமயத்தில், அத்தீர்ப்பை நீர்த்து போகச் செய்வதற்காக, அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆதரவு திரட்டுகிறார்
இது, டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று கூறி, அவசர சட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா அல்லாத முதல்-மந்திரிகளை சந்தித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டார்.
மம்தாவுடன் சந்திப்பு
இந்நிலையில், அவர் நேற்று கொல்கத்தா சென்றார். மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
அவசர சட்டத்துக்கு எதிரான தனது போராட்டத்துக்கு ஆதரவு கோரினார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கைகோர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானும் சென்றிருந்தார்.
பின்னர், மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அவசர சட்டத்தை சட்டமாக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
மாநிலங்களவையில் அந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கு அரை இறுதி பந்தயமாக அமையும். மசோதாவை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
சரத்பவாரை சந்திக்கிறார்
அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்குகிறது. எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்க சி.பி.ஐ.யை பயன்படுத்துகிறது. பா.ஜனதா அல்லாத அரசுகளை துன்புறுத்த கவர்னர்களை பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) மும்பைக்கு சென்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.