நாட்டில் உள்ள முதல்-மந்திரிகளில் மிக ஏழ்மையானவர் மம்தா பானர்ஜி; தகவல் வெளியீடு


நாட்டில் உள்ள முதல்-மந்திரிகளில் மிக ஏழ்மையானவர் மம்தா பானர்ஜி; தகவல் வெளியீடு
x

நாட்டில் உள்ள முதல்-மந்திரிகளில் சொத்துகளின் அடிப்படையில் மிக ஏழ்மையானவராக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார்.

புதுடெல்லி,

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள முதல்-மந்திரிகளின் சொத்து விவரங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரிகள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதல்-மந்திரிகளின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், மிக ஏழ்மையான முதல்-மந்திரியாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளார். அவரிடம் ரூ.15 லட்சம் மட்டுமே சொத்துகள் உள்ளன. இந்த பட்டியலில், மீதமுள்ள 29 முதல்-மந்திரிகளும் கோடீசுவரர்கள் ஆவார்.

அவர்களில் முதல் 3 இடங்களை முறையே ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி (ரூ.510 கோடி), அருணாசல பிரதேச முதல்-மந்திரி பெம காண்டு (ரூ.163 கோடி) மற்றும் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் (ரூ.63 கோடி) ஆகியோர் பிடித்து உள்ளனர்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அடுத்து குறைவான சொத்துகள் கொண்டவர்கள் வரிசையில் இடம் பெற்று உள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இருவரும் தலா ரூ.1 கோடி சொத்துகளை வைத்திருக்கின்றனர்.

பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகிய இருவரின் சொத்து மதிப்பு தலா ரூ.3 கோடி என எடுத்து காட்டப்பட்டு உள்ளது.


Next Story