மும்பை: மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை..!
மும்பையில் மனைவியுடன் சண்டையிட்ட நபர் ஒருவர், தனது 6 வயது மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால், தனது 6 வயது மகனை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து மும்பை காவல்துறை கூறும்போது, குற்றம் சாட்டப்பட்ட நந்தன் என்பவர், தனது மனைவி சுனிதாவுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் தனது மகன் லக்ஷ்யாவைக் கொன்றார்.
நேற்று காலை, சுனிதா தனது 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காகச் சென்று, வீடு திரும்பியபோது, வீட்டில் ரத்த வெள்ளத்தில் லக்ஷ்யா பிணமாக கிடந்துள்ளார். கூர்மையான பொருளால் அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மல்வானி போலீசார் நந்தனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் தம்பதி இடையே ஏதாவது ஒரு பிரச்னையால் அடிக்கடி சண்டை நடப்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.