நவராத்திரி பண்டிகை நடன மேடையில் மயங்க விழுந்து மகன் மரணம்; செய்திகேட்ட தந்தையும் உயிரிழப்பு


நவராத்திரி பண்டிகை நடன மேடையில் மயங்க விழுந்து மகன் மரணம்; செய்திகேட்ட தந்தையும் உயிரிழப்பு
x

நவராத்திரி பண்டிகையையொட்டி கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மும்பை,

இந்து மத பண்டியான நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகையின் போது கர்பா என்ற நடனம் வட இந்தியாவில் பிரபலமாகும். நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடனம் ஆடப்படுகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டம் வீரர் நகரை சேர்ந்த மனீஷ் நரப்ஜி சோனிங்ரா (வயது 35) நேற்று முன் தினம் இரவு கர்பா நடன நிகழ்ச்சியில் பங்கேற்று குடும்பத்தினருடன் நடனமாடியுள்ளார்.

அப்போது, நடன மேடையில் ஆடிக்கொண்டிருந்த மனீஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மனீஷின் தந்தை நரப்ஜி சோனிங்ரா (வயது 66) மற்றும் குடும்பத்தினர் மனீஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மனீஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தந்தை நரப்ஜியிடம் தெரிவித்துள்ளனர். மகன் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் கூறிய மறுநிமிடமே அதிர்ச்சியில் தந்தை நரப்ஜி சோனிங்ராவும் மருத்துவமனை வளாகத்திலேயே சுருண்டு விழுந்தார்.

நரப்ஜியை மீட்ட டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்ற சோக செய்தி தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மகன் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் மறுநிமிடமே தந்தையும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story