விங் கமாண்டர் என கூறி டெல்லி விமானப்படை நிலையத்திற்குள் நுழைந்த நபர் கைது
போலியான ஆவணங்களை காட்டி முதல் அடுக்கு பாதுகாப்பை கடந்த நபர், தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
புதுடெல்லி:
டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் பாலம் விமானப்படை நிலையம் உள்ளது. பாதுகாப்பு நிறைந்த இந்த வளாகத்திற்குள் நுழைந்த ஒரு நபர், தன்னை விமானப்படையின் விங் கமாண்டர் என கூறிக்கொண்டு அங்குள்ள பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றபோது அவரை விமானப்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் போலியான அடையாள அட்டையுடன் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் விநாயக் சத்தா (வயது 39) என்பதும், விமானப்படை நிலையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்க விரும்பியதால் போலி அடையாள அட்டையை காட்டி வந்ததும் தெரியவந்தது. இதயைடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக துணை கமிஷனர் ரோகித் மீனா கூறியதாவது:-
விநாயக் சத்தா தன்னை விங் கமாண்டர் என கூறிக்கொண்டு திம்மையா சாலையில் உள்ள விமானப்படை பல் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளார். போலியான அடையாள ஆவணங்களை காட்டி முதல் அடுக்கு பாதுகாப்பை கடந்து வந்த அவர், தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றபோது விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கினார். அதன்பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபரிடம் போலியான அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் பெயரில் பல மதுபான அட்டைகள் இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போலி ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுல்தான்புரியைச் சேர்ந்த மற்றொரு நபர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
கன்டோன்மென்ட் பகுதிகளில் மானிய விலையில் மதுபானம் வாங்குவதற்கு பாதுகாப்பு படையினருக்கு மதுபான அட்டைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.