சமூக வலைதளங்களில் தொடர்பை துண்டித்த பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட நபர்! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
புதுடெல்லி,
சமூக வலைதளங்களில் பழகி வந்த ஒரு 16 வயது சிறுமி, தன்னுடன் பேசாமல் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரத்தில் அந்த மாணவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தெற்கு டெல்லியின் திக்ரி பகுதியில், ஒரு நபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
சிறுமியின் தோள்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயம் ஏற்பட்டு, பாத்ரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். போலீசாரிடம் அந்த மாணவி கூறியதாவது:-
புதுதில்லியில் உள்ள டெவ்லி சாலையில் உள்ள சர்வதேச பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததாக அந்த சிறுமி கூறினார்.
அந்த மாணவி பள்ளியிலிருந்து திரும்பி வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் தன்னைத் துரத்துவதை கவனித்தார். சங்கம் விஹாரில் உள்ள பி-பிளாக்கை மாணவி அடைந்தபோது, ஒருவன் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டான்.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியவர்களில் ஒருவரை மாணவி அடையாளம் கண்டுள்ளார். அதன் பின், குற்றம் சாட்டப்பட்ட பாபி மற்றும் பவன் என்ற சுமித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அர்மான் அலி என்பவருடன் மாணவிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த 4-5 மாதங்களாக அவனுடன் மாணவி பேசவில்லை. இந்நிலையில் அர்மான் அலி மாணவியை பின்தொடர்ந்து கொண்டிருந்தான் என்று மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின், இரண்டு நபர்களையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளையும், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஒரு சுடப்பட்ட வெற்று தோட்டா ஆகியவற்றை மீட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும், மூன்றாவது குற்றவாளியான அர்மான் அலியுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவி தொடர்பு கொண்டதாகக் கூறினர்.
அந்த மாணவி 5-6 மாதங்களுக்கு முன்பு அர்மான் அலியுடன் பேசுவதை நிறுத்தினாள். இது அலிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பெண்ணை சுடுவதற்கு உதவ, பாபி மற்றும் பவன் ஆகியோரை அலி தொடர்பு கொண்டார் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிய அலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.