'கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு' வைத்த மனைவி - கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்


கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி - கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
x
தினத்தந்தி 15 July 2023 11:31 AM IST (Updated: 15 July 2023 11:57 AM IST)
t-max-icont-min-icon

கோழிக்குழம்பு வைக்குமாறு கணவன் கூறிய நிலையில் மனைவி கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (வயது 45).

கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா கோழிக்குழம்பு வைக்காமல் கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார். இதனால், மதுபோதையில் போஷம் மனைவி சங்கரம்மாவிடம் இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இரவு இருவரும் தங்கள் அறையில் உறங்கியுள்ளனர். பக்கத்து அறையில் அவர்களின் இளைய மகன் சந்தோஷ் உறங்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த போஷம் அதிகாலை விழித்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கோடாரியால் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சங்கரம்மாவை வெட்டிக்கொன்றார். மனைவியை கோடாரியால் கழுத்தில் வெட்டிக்கொன்ற போஷம் வீட்டில் இருந்து உடனடியாக ஓடிவிட்டார். தாயின் அலறல் சத்தம் கேட்டு விழிந்த மகன் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் தாயார் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சங்கரம்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய போஷமை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story