உணவு சமைக்க மறுத்த மனைவியை சரமாரியாக தாக்கிய கணவருக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


உணவு சமைக்க மறுத்த மனைவியை சரமாரியாக தாக்கிய கணவருக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
Image Courtesy : Indiatimes.com

உணவு சமைக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் வன்ய ஜெகன் கொர்டி (வயது 39). இவரது மனைவி லட்சுமிபாய். இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், 2013 செப்டம்பர் 22ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்படவே இனி உங்களுக்கு உணவு சமைக்கமாட்டேன் என்று லட்சுமி தனது கணவர் ஜெகனிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் வீட்டில் இருந்த மரக்கட்டையால் மனைவி லட்சுமி தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லட்சுமி ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தன்னை தாக்கிய கணவர் மீது லட்சுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கு தானே மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த கோர்ட்டு, மனைவியை கடுமையாக தாக்கிய வழக்கில் ஜெகன் குற்றவாளி என்று அறிவித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜெகனுக்கு கோர்ட்டு 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜெகனை போலீசார் சிறையில் அடைத்தனர். உணவு சமைக்க மறுத்த மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.


Next Story