கேரளா: நடுரோட்டில் தாயை குத்திக் கொன்ற வாலிபர் கைது
கேரளாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் தாயை கத்தியால் குத்தி படுகொலை செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தலவூரை சேர்ந்தவர் மினிமோள் (வயது 50). இவரை குடும்பத்தினர் கண்டு கொள்ளாததால் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கலயபுரத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மினிமோளை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அவரது மகன் ஜோமோன்(25) காப்பகத்திற்கு வந்தார்.
கத்தியால் குத்தினார்
அதைக் கேட்ட மினிமோள் தன் மீது மகனுக்கு பாசம் வந்து விட்டது என மகிழ்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து ஜோமோன் ஒரு மோட்டார் சைக்கிளில் மினிமோளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். மதியம் 12.30 மணிக்கு கொட்டாரக்கரை-புனலூர் சாலையில் செங்கமநாடு சந்திப்பில் சென்ற போது ஜோமோன் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தினார்.
உடனே மினிமோள் கீழே இறங்கியபடி ஏன் இங்கு நிறுத்தினாய்? என கேட்டார். அப்போது திடீரென ஜோமோன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் மினிமோளை சரமாரியாக குத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மினிமோள் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மினிமோளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மினிமோள் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே கத்தியை காட்டி மிரட்டி தப்பியோட முயன்ற ஜோமோனை அந்த பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாரக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தாயை கொன்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.