மாரடைப்பால் ரெயிலின் கழிவறையில் உயிரிழந்த மங்களூரு வியாபாரி


மாரடைப்பால் ரெயிலின் கழிவறையில் உயிரிழந்த மங்களூரு வியாபாரி
x
தினத்தந்தி 25 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 6:45 PM GMT)

சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த நிலையில் மாரடைப்பால் ரெயிலின் கழிவறையில் மங்களூரு வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.

மங்களூரு-

சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த நிலையில் மாரடைப்பால் ரெயிலின் கழிவறையில் மங்களூரு வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். ரெயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் அவரது உடல் மீண்டும் அதே ரெயிலில் மும்பைக்கே சென்ற சம்பவம் நடந்துள்ளது.

வியாபாரி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கின்னிகோலி மென்னபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பங்கேரா(வயது 56). இவர் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கின்னிகோலியில் வசித்து வருகிறார்கள். மோகன் மட்டும் மும்பையில் தங்கி இருந்து வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 18-ந் தேதி அவர் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் மும்பையில் இருந்து மங்களூருவுக்கு வந்த ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்து வந்தார்.

கண்காணிப்பு கேமராக்களில்...

அவரை வரவேற்க சூரத்கல் ரெயில் நிலையத்தில் மோகனின் அண்ணன் ராம் பங்கேரா மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால் மோகன் வரவில்லை. இதுபற்றி ரெயிலில் வந்த டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது அவர் மோகன் இருந்த இருக்கையில் இருந்து அவரது பைகள், செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவை கிடைத்திருப்பதாகவும், ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

ஒருவேளை அவர் மங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இறங்கி இருக்கலாம் என்றும் கூறினார். அதன்பேரில் மோகனின் குடும்பத்தினர் மங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் புகார் செய்தனர். அதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பிணமாக மீட்பு

இதற்கிடையே மும்பையில் தங்கி இருக்கும் மோகனின் உறவினர்களும் மும்பை ரெயில் நிலையத்தில் அவரைப்பற்றி போலீசாரிடம் தெரிவித்து அவரை தேடி வந்தனர். ஆனால் மோகனைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மோகன் பயணித்து வந்த ரெயில் மீண்டும் மும்பையை சென்றடைந்தது. அப்போது ரெயில்வே ஊழியர்கள் அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் கழிவறையை திறந்து பார்த்து ஆய்வு செய்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குளிர்சாதன பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். அதையடுத்து அவர் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது மோகன் என்பது தெரியவந்தது.

ரெயில்வே அதிகாரிகளிடம் புகார்

அதாவது ரெயிலில் பயணித்தபோது மோகன் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் ரெயில்வே ஊழியர்கள் அலட்சியமாக கழிவறையை சரியாக ஆய்வு செய்யவில்லை. இதனால் அந்த ரெயில் மீண்டும் மும்பையை சென்றடைந்து இருக்கிறது. அங்கு வைத்து மோகனின் உடல் மீட்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி டிக்கெட் பரிசோதகர் மங்களூரு போலீசார் மூலம் மோகனின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்களும் பிணமாக மீட்கப்பட்டது மோகன் தான் என்பதை உறுதி செய்தனர். இருப்பினும் அவர்கள் ரெயில்வே ஊழியர்களின் அலட்சியம் குறித்து மங்களூரு போலீசார் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story