மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே


மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
x

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநில நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும், அதையடுத்து இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நேற்று மாநிலங்களவையில் வழக்கமான அலுவல்களை ரத்து செய்து, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.

'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்

பின்னர் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'மணிப்பூரில் நிலை எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்களின் விளைவுகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லை மாநிலங்களுக்கு இது நல்ல விஷயமல்ல.

மணிப்பூரில் நடந்த முற்றிலும் பயங்கரமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த மாநில வன்முறை குறித்து மோடி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி வலியுறுத்துகிறது.

'மோடி விளக்கம் அளிக்க வேண்டும்'

மணிப்பூரில் 83 நாட்களாக நடந்த தடையற்ற வன்முறை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

பிரதமர் தனது 'ஈகோ'வை விடுத்து, மணிப்பூரில் நிலையை மேம்படுத்த தனது அரசு என்ன செய்துள்ளது என்று தெரிவிக்கவும், அங்கு இயல்புநிலை எப்போது திரும்பும் என்று விளக்கம் அளிக்கவும் இதுவே சரியான நேரம்.' என்று கூறியுள்ளார்.


Next Story