மணிப்பூர் சம்பவம்: பிரதமர் மோடி தலையிட வேண்டும் - மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கோரிக்கை
மணிப்பூர் சம்பவத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா,
மணிப்பூரை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா. 'இரும்பு மங்கை' எனப்படும் இவர், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 16 ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர். அந்த நேரத்தில், அவருக்கு உணவு குழாய் மூலமாக வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் மானபங்க வீடியோ குறித்து இரோம் ஷர்மிளா கூறியதாவது:- பெண்கள் மானபங்க சம்பவம், மனிதத்தன்மையற்றது. அதை பார்த்து என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநில அரசு முற்றிலும் தோல்வி அடைந்தநிலையில், பிரதமர் மோடி தலையிட வேண்டும். குஜராத் மக்களைப்போல், மணிப்பூர் மக்களுக்கும் அவரது தலைமை தேவைப்படுகிறது.
அதுபோல், மணிப்பூர் முதல்-மந்திரி பைரேன்சிங் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.