கலவரம் பாதித்த மணிப்பூரில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்: 350 முகாம்களில் தங்க வைப்பு


கலவரம் பாதித்த மணிப்பூரில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்: 350 முகாம்களில் தங்க வைப்பு
x

கலவரம் பாதித்த மணிப்பூரில் 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் சுமார் 350 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்பால்,

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் இதைத் தீவிரமாக எதிர்க்கின்றன.

இதனால் இரு தரப்பிலும் நடந்து வருகிற மோதல்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாநிலத்தில் பதற்ற மான சூழல் தொடர்கிறது.

ஆயுதங்கள் ஒப்படைப்பு

போலீஸ் நிலையங்களில் இருந்து கலவரக்காரர்கள் ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்று தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன் சிங்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து 990 ஆயுதங்களும், 13 ஆயிரத்து 526 வெடிபொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இம்பால் கிழக்கு பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., கலவரக்காரர்கள் தாங்கள் பறித்துச்சென்ற ஆயுதங்களை ஓசையின்றி ஒப்படைப்பதற்கு ஒரு பெட்டியை வைத்தது, அங்கு பேசு பொருளானது. அதிலும் தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட 130 ஆயுதங்களை கலவரக்காரர்கள் போட்டுள்ளனர்.

50 ஆயிரம் பேர் இடம் பெயர்வு

இந்த நிலையில், மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி ஆர்.கே.ரஞ்சன், இம்பாலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதங்களைத் தேடும் பணி நடக்கிறது. இந்த தேடுதல் வேட்டையில் 53 ஆயுதங்களும், 39 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. கலவரத்தால் 50 ஆயிரத்து 698 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இதையொட்டி மணிப்பூர் அரசு ஒரு அறிக்கையும் வெளியிட்டது.

விலைவாசியை கட்டுப்படுத்த

அந்த அறிக்கையில், "அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசி உயர்வைத் தடுக்க விலைக்கட்டுப்பாட்டு வழிமுறை பின்பற்றப்படுகிறது. மாநிலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை எண்.37 வழியாக பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. 35 ஆயிரம் டன் கட்டுமானப்பொருட்கள், எரிபொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள், 2,376 லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story