மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் மதுக்கடை ஊழியர் சாவு...


மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் மதுக்கடை ஊழியர் சாவு...
x
தினத்தந்தி 9 Jun 2023 9:30 PM GMT (Updated: 10 Jun 2023 9:12 AM GMT)

கதக்கில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி காயமடைந்த மதுக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கதக்:

கதக்கில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி காயமடைந்த மதுக்கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாஞ்சா நூல்

கர்நாடகத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மாஞ்சா நூல், கண்ணாடி பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவதால், அதன் கூர்மைத்திறன் அதிகமாக இருக்கும். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கழுத்தில் சிக்கி பல உயிர்களை காவு வாங்கி உள்ளது. இந்த கயிற்றால் பறவைகளும் உயிரிழக்கின்றன.

இந்த நிலையில் கதக் மாவட்டத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விஜயநகர் மாவட்டம் அகரிபொம்மனஹள்ளி தாலுகா தேவரகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் கதக் டவுன் பகுதியில் உள்ள மதுபான விடுதியில் ஊழியராகவேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் வேலைக்காக கதக் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வாலிபர் சாவு

அவர் டவுன் சாலையில் சென்றபோது அந்த பகுதியில் சிறுவர்கள் மாஞ்சா நூலை கொண்டு பட்டம் விட்டனர். அந்த சமயத்தில் அந்த கயிறு, மோட்டார் சைக்கிளில் சென்ற ரவி கழுத்தில் சிக்கியது. இதில் அவரது கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், உயிருக்கு போராடினார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கதக் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவியின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கிய சம்பவம் நடந்த பகுதியில் இதுவரை 5 பேர் மாஞ்சா நூலில் சிக்கி காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story