உத்தரகாண்ட் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீண்டும் இடையூறு: நாளை பணிகளை தொடங்க முடிவு?


உத்தரகாண்ட் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீண்டும் இடையூறு: நாளை பணிகளை தொடங்க முடிவு?
x

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையில் கடந்த 12-ந்தேதி விபத்து ஏற்பட்டது. அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அதனுள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அரசுத்துறையினர் 10 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

இடிந்து விழுந்த பகுதிக்குள் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அதன் வழியே தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலையின் மேலிருந்து துளையிடுவது போன்ற மாற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சுரங்கப்பாதைக்குள் துளையிடும் பிரமாண்ட எந்திரத்தின் தளத்தில் ஏற்பட்ட விரிசல், துளையிடும்போது எற்பட்ட இடையூறால் நேற்று முன்தினம், துளையிடும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. மூன்றாவது முறையாக ஏற்பட்ட இந்த பிரச்சினைகளை சரிசெய்து, மீண்டும் துளையிடும் பணியை தொடங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால், மறுபடியும் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இயந்திரம் மூலமாக மீட்காமல் மீட்புக்குழுவினரே மீட்பு பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நாளை தொடங்கும் என்று உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறினார். ஐதராபாத்தில் இருந்து நாளை பிரத்யேக இயந்திரம் கொண்டு வரப்பட்டு சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள ஆகர் இயந்திரத்தை உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story