6 மாநில உள்துறை செயலாளர்கள் உள்பட உயரதிகாரிகள் பலர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி


6 மாநில உள்துறை செயலாளர்கள் உள்பட உயரதிகாரிகள் பலர் நீக்கம்:  தேர்தல் ஆணையம் அதிரடி
x
தினத்தந்தி 18 March 2024 10:24 AM GMT (Updated: 18 March 2024 10:33 AM GMT)

மராட்டிய தலைமை செயலாளரிடம் அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், உத்தரவை செயல்படுத்தி இன்று மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதன்படி, ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்களான ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதில், நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஆணையத்தின் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

இதன்படி, குஜராத், உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த உள்துறை செயலாளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதனுடன், மேற்கு வங்காள டி.ஜி.பி.யும் நீக்கப்பட்டார். இதேபோன்று, மிசோரம் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களின் பொது நிர்வாக துறைகளை சேர்ந்த செயலாளர்களும் நீக்கப்பட்டு உள்ளனர்.

மும்பை மாநகராட்சியின் ஆணையாளர் இக்பால் சிங் சஹால், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோரையும் நீக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்தல் பணியுடன் தொடர்புடைய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

3 ஆண்டுகள் பணியில் உள்ளவர்கள் அல்லது அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவர்களை பணியிட மாற்றம் செய்யும்படியும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

எனினும், மராட்டியத்தில் சில நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் சில கூடுதல் மற்றும் துணை நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோரை மாற்றும் உத்தரவு ஏற்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாத சூழலில், மாநில தலைமை செயலாளரிடம் அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், உத்தரவை செயல்படுத்தி இன்று மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது.


Next Story