மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டம்- கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்


மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டம்- கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்
x

ஜால்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்.

மும்பை,

ஜால்னா மாவட்டத்தில் மராத்தா இட ஒதுக்கீடு கேட்டு நேற்று போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடியில் பெண்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராத்தா அமைப்புகள் சார்பில் வாஷிம் மாவட்டம் ராஜ்குமார் சவுக்கில் இன்று சாலை மறியல் நடத்தப்பட்டது.இதன்காரணமாக ஐதராபாத் - அகோலா நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்திய போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், உள்துறை மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்ற என கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல சம்பாஜிநகரில் (அவுரங்காபத்) புலம்பரி தாலுகாவில் உள்ள சம்பாஜி நகர் - ஜல்காவ் நெடுஞ்சாலையில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது காரை தீவைத்து கொளுத்தினார். சோலாப்பூர் அக்கல்காட் பகுதியில் மராத்தா அமைப்பினர் சாலையில் டயரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல சோலாப்பூரில், துலே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில் மராத்தா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர யவத்மால், துலே, பீட், பர்பானி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மராத்தா அமைப்பினர் மீது போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து போராட்டம் நடந்தது.


Next Story