இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை


இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை
x

டி.நரசிப்புராவில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இந்து அமைப்பு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மைசூரு:-

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுன் ஸ்ரீராம்புராவை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 32). இவர் இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். கடந்த 8-ந்தேதி டி.நரசிப்புரா டவுனில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேணுகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்த நிலையில், அன்றைய தினம் அங்குள்ள கோவிலுக்குள் அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்தா, சந்தேஷ் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர்.

அப்போது வேணுகோபால் அவர்களை தடுத்து நிறுத்தி, கோவிலுக்குள் மோட்டார் சைக்கிள்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று தெரிவித்து கோவில் நுழைவுவாயில் கதவை பூட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.

புனித் படம் வைப்பதில் தகராறு

இதையடுத்து டி.நரசிப்புரா டவுனில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட வேனில் அனுமன் படத்துடன் பாரதமாதா படமும் வைக்கப்பட்டிருந்தது. அந்த படங்களுடன் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் படத்தை மணிகாந்தா மற்றும் சந்தேஷ் உள்ளிட்டோர் வைக்க முயன்றுள்ளனர். இதற்கு வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர், அனுமன் மற்றும் பாரத மாதா படத்துடன் மனிதர்கள் படம் எதையும் வைக்கக்கூடாது என்று கூறி உள்ளார். இதனால் வேணுகோபால் தரப்பினருக்கும், மணிகாந்தா மற்றும் சந்தேஷ் உள்ளிட்டோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போதும் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். மணிகாந்தா, சந்தேஷ் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கு அனுமன் ஜெயந்தி ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. ஊர்வலம் முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் வேணுகோபால் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த சிலர், ஊர் பிரமுகர் அழைப்பதாக கூறினர். இதையடுத்து வேணுகோபாலும் அவர்களுடன் சென்றார். அப்போது அவர்கள், வேணுகோபாலை டி.நரசிப்புரா வெளிப்புறத்தில் வருணா தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு நின்ற மணிகாந்தா, சந்தேஷ் தரப்பினர் வேணுகோபாலுடன் தகராறு செய்துள்ளனர். அவர்கள் வேணுகோபாலை தாக்கியதுடன், பீர் பாட்டிலை உடைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர். இதில் வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மணிகாந்தா, சந்தேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

144 தடை உத்தரவு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.நரசிப்புரா டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான வேணுகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேணுகோபால் கொலை செய்யப்பட்ட தகவல் டி.நரசிப்புரா முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மேலும் ஏராளமானோர் டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். வேணுகோபாலின் உடலை பார்த்து அவரது மனைவி பூர்ணிமா கதறி அழுதார்.

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் டி.நரசிப்புரா டவுனில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் மற்றும் உயர் போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தால் டி.நரசிப்புரா டவுனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் நேற்று காலை முதல் டவுனில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டவுனில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

2 பேர் கைது

இந்து அமைப்பு பிரமுகர் வேணுகோபால் கொலை தொடர்பாக டி.நரசிப்புரா போலீசார் அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்தா, சந்தேஷ், அனில், சங்கர், மஞ்சு, ஹாரீஸ் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான மணிகாந்தா, சந்தேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் டி.நரசிப்புரா டவுனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story