பட்டாசு விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை-போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன்


பட்டாசு விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை-போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன்
x

கர்நாடகத்தில் இனி வரும் நாட்களில் பட்டாசு விபத்துகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி.அலோக் மோகன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து நடந்திருந்தது. அந்த குடோனை நேற்று காலையில் மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

அத்திப்பள்ளி பட்டாசு குடோனில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது. சிவகாசியில் இருந்து அத்திப்பள்ளிக்கு பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி டிரைவரும் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணிகளும் நடந்து வருகிறது. வெடி விபத்திற்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக குடோனில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தாலும் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் இனிவரும் நாட்களில் இதுபோன்ற பட்டாசு விபத்துகள் நடைபெறுவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை இருப்பதால், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சோதனை நடத்தி பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story