ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் தொடங்கியது -உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு


ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் தொடங்கியது -உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
x

மைசூருவில் ஜி20 நாடுகள் பிரதிநிதிகளின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு:-

ஜி20 நாடுகள் பிரதிநிதிகள் கூட்டம்

ஜி20 நாடுகள் சபைக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதையொட்டி ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், அந்த நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு மட்டத்திலான கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நிதித்துறை தொடர்பான கூட்டமும், கலாசார செயல் குழு கூட்டம் கலாசார நகரமான ஹம்பியிலும் நடந்தது.

மைசூருவில் தொடங்கியது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜி20 நாடுகளின் 3-வது கூட்டம் மைசூருவில் நேற்று தொடங்கியது. மைசூரு நகர் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடந்தது. இதில் 20 நாடுகளின் 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மைசூரு மண்டலத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் மன்னர் ஆட்சி, நுண்ணிய பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, வணிகம், பெண்கள் வளர்ச்சி, டிஜிட்டல் வளர்ச்சி, பசுமை வளர்ச்சி, உலக வளர்ச்சி ஒழுங்குமுறை மற்றும் சுற்றுலா தொடர்பாக பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் 20 நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டதால், நட்சத்திர ஓட்டலை சுற்றி பலத்த உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மைசூரு நகரின் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்து இருப்பதால் அரண்மனை, உயிரியல் பூங்கா, கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் நட்சத்திர ஓட்டல், சுற்றுலா தலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மைசூரு நகரில் டிரோன் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்விளக்கு அலங்காரம்

மேலும், மைசூரு நகரின் அழகை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்த்து ரசிப்பதற்காக முக்கிய சாலைகளில் இருக்கும் மன்னர்கள் சிலைகள், சர்க்கிள்கள், பூங்காக்கள், பாரம்பரிய கட்டிடங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மைசூரு அரண்மனையில் நாளை (புதன்கிழமை) மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளது.

முன்னதாக ஜி20 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மைசூரு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளை கலெக்டர் ராஜேந்திரா, அரண்மனை மண்டலி இயக்குனர் சுப்பிரமணியா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


Next Story