மேகாலயா: முதல்-மந்திரியாக கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்பு என தகவல்


மேகாலயா: முதல்-மந்திரியாக கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்பு என தகவல்
x

மேகாலயா முதல்-மந்திரியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.



ஷில்லாங்,


60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.

இந்நிலையில், கட்சி தலைவர் ஜே.டி. சங்மா கூறும்போது, நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். காசி மற்றும் ஜைந்தியா ஹில்ஸ் பகுதியில் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேகாலயாவில் மொத்தம் 31 முதல் 32 தொகுதிகளை கைப்பற்றுவோம். கொண்டாட்டங்களுக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என வாக்கு எண்ணிக்கைக்கு முன் கூறினார்.

ஆளும் கூட்டணியில் என்.பி.பி. மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் இருந்தபோதும், தேர்தலில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன.

இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வாவை, சங்மா நேரில் சந்தித்து அரை மணிநேரம் வரை பேசினார். ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் ஆதரவை பெற இந்த சந்திப்பு நடந்தது என கூறப்படுகிறது. எனினும், மேகாலயா தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய கூடும் என தேர்தலுக்கு பின்னான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இந்த சூழலில், மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், முன்னாள் துணை முதல்-மந்திரி மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வருகிற 7-ந்தேதி நடைபெறும் என கூறியுள்ளார்.

இதன்படி, கட்சி தலைவர் கன்ராட் சங்மா முதல்-மந்திரியாக பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளனர். அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொள்வார். போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். பிற கட்சிகளிடமும் நாங்கள் ஆதரவு கேட்டு வருகிறோம்.

அதனால், எண்ணிக்கை 38 முதல் 40 ஆக அதிகரிக்க கூடும் என டின்சாங் கூறியுள்ளார். பா.ஜ.க. மற்றும் எச்.எஸ்.பி.டி.பி. கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 32 பேரின் ஆதரவு அக்கட்சிக்கு உள்ளது. அக்கட்சி தனியாக மொத்தம் 26 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.


Next Story