மேகாலயா தேர்தல் அறிக்கை; பெண்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அள்ளி தெளித்த பா.ஜ.க.


மேகாலயா தேர்தல் அறிக்கை; பெண்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை அள்ளி தெளித்த பா.ஜ.க.
x

மேகாலயா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், அரசு ஊழியர்களுக்கு பா.ஜ.க. பல சலுகைகளை அறிவித்து உள்ளது.

ஷில்லாங்,


வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும். இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேகாலயா சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தல், பொது பேரணி மற்றும் கூட்டங்களை நடத்துதல் என ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை ஷில்லாங் நகரில் வெளியிட்டு அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று பேசினார். அதில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்புடைய பல்வேறு திட்டங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

அவர் பேசும்போது, கே.ஜி. முதல் பி.ஜி. (கல்லூரி பட்டமேற்படிப்பு) வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்குவோம். அரசு வேலைகளில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீடு பெறுவார்கள்.

எங்களது கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால், சிறந்த மதிப்பெண்களை பெறும் கல்லூரி செல்ல கூடிய மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என கூறியுள்ளார். பெண் குழந்தை பிறக்கும்போது, ரூ.50 ஆயிரம் தொகைக்கான பத்திரம் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவன் இல்லாத ஒற்றை தாய்மார்களுக்கு ரூ.24 ஆயிரம் ஆதரவு தொகை வழங்கப்படும். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

மேகாலயாவில் 7-வது ஊதிய கமிசனை நாங்கள் அமல்படுத்துவோம். சரியான நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story