மேகாலயாவில் பா.ஜனதா - தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி


மேகாலயாவில் பா.ஜனதா - தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி
x

மேகாலயா மாநிலத்தில் மீண்டும் தேசிய மக்கள் கட்சி -பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபைக்கு 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்றது.

அதில் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும் பாஜனதா கூட்டணி 3 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் மேகாலயா மாநில முதல்-மந்திரியும் என்.பி.பி. கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உதவும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மேகாலயாவில் என்பிபி ஆட்சி அமைக்க பாஜனதாவின் ஆதரவு கடிதம் வழங்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவிரி தெரிவித்துள்ளார். மேலும் என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் என்று பாஜனதா சார்பில் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மேகாலயா மாநிலத்தில் மீண்டும் தேசிய மக்கள் கட்சி - பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story