ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு


ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு
x

கோப்புப்படம்

ஆன்லைன் விளையாட்டுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. உண்மையான பணத்தை கையாளும் விளையாட்டுக்கு அனுமதி இல்லை.

புதுடெல்லி,

ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேற்று வெளியிட்டார். அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (எஸ்.ஆர்.ஓ.) இருக்கும். கட்டமைப்புகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அனுமதியை அவை முடிவு செய்யும்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்புக்கான மாதிரியை அளித்துள்ளன. இது குறித்து அவற்றுடன் விவாதிக்கப்படும். சுய ஒழுங்குமுறை அமைப்பினை அரசு அறிவிக்கும். இது தன்னாட்சி அமைப்பாக இருக்கும். நாங்கள் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடங்குவோம்.

பணத்தை கையாளும் விளையாட்டு

உண்மையான பணத்தை கையாள்கிற ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.

பணம் சேகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கே.ஒய்.சி. என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசுக்கு எதிரான தவறான தகவல்கள்

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவ்வப்போது தவறான தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, "ஆன்லைனில் மத்திய அரசு பற்றிய தவறான தகவல்களை வெளியிடும் பிரச்சினையில், மத்திய அரசு ஒரு நிறுவனத்தை எங்கள் அமைச்சகம் மூலம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பு, ஆன்லைனில் உள்ள அனைத்து உள்ளடக்க அம்சங்களையும் சரிபார்க்கும்" என தெரிவித்தார்.


Next Story