மைசூரு ரோடு-கெங்கேரி இடையே 4 நாட்கள் மெட்ரோ சேவை ரத்து


மைசூரு ரோடு-கெங்கேரி இடையே 4 நாட்கள் மெட்ரோ சேவை ரத்து
x

பராமரிப்பு பணிகள் எதிரொலி காரணமாக மைசூரு ரோடு-கெங்கேரி இடையே 4 நாட்கள் மெட்ரோ சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

பெங்களூரு:

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பையப்பனஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெட்ரோ சேவை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கெங்கேரி-செல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கெங்கேரி மெட்ரோ நிலையம் முதல் புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு வரும் இடம் வரை பராமரிப்பு மற்றும் சோதனை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் மைசூரு ரோடு-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அன்றைய நாட்களில் வழக்கம்போல் பையப்பனஹள்ளி- மைசூரு ரோடு இடையே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். வருகிற 31-ந் தேதி காலை முதல் வழக்கம்போல் கெங்கேரி வரை மெட்ரோ ரெயில்கள் சேவை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.


Next Story