பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் இயக்கம்; 25-ந்தேதி சோதனை ஓட்டம் நடக்கிறது
பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே ஜனவரி மாதம் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும், 25-ந்தேதி சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு வரை 15.257 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் பணிகள் தடைப்பட்டது. கொரோனாவுக்கு பின்னர் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்து உள்ளது.
இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி முதல் பையப்பனஹள்ளி-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளதாகவும், இந்த சோதனை ஓட்டம் 45 நாட்கள் நடக்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தால் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி தொடக்கத்தில் பையப்பனஹள்ளி- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.